எதிர்வரும் தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
வழமையான செய்தியாளர் சந்திப்பொன்றில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலி கோஸாக் (Julie Kozack) இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அல்லது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், நாங்கள் வேலைத்திட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுப்போம். அதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மிக மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு வேலைத்திட்டங்களின் நோக்கங்களை அடைவது ஒரு முக்கிய படியாகும்.
இலங்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் நாடு இன்னும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை எனவும் ஜூலி கோஸாக் தெரிவித்துள்ளார்.
கடினமாக வென்ற வெற்றிகளைப் பாதுகாப்பது இலங்கைக்கு முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.