நாட்டில் ஏனையோருக்கு வாக்களித்து பரிசோதிப்பதற்கான சோதனைக் காலம் இதுவல்ல என்பதால் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரசார கூட்டம்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,”நாட்டில் நெருக்கடிகள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சஜித் பிரேமதாச பயந்து ஓடினார். மறுபுறம் அநுரகுமார திஸாநாயக்கவால் ஒரு சட்டத்தைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாது.
இவ்வாறானவர்களுக்கு வாக்களித்து பரிசோதித்து பார்க்க வேண்டாம். காரணம் இது பரிசோதனைக்கான காலம் அல்ல.
எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து மீண்டும் அவரிடம் நாட்டைக் கையளிக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதிக வாக்குகள்
அந்த சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாச போட்டியிடுவதாகக் கூறினாலும், பின்னர் டலஸ் அழகப்பெருமவே களமிறக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் கூட தன்னால் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிந்துகொண்டு தான், அன்று சஜித் பின்வாங்கினார்.
அவ்வாறான ஒருவரால் எவ்வாறு நாட்டு மக்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியும்?
மறுபுறம் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 3 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார். அவரால் எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.