ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை(21.09.2024) நடைபெறவுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நேரம் வரையான காலப்பகுதி அமைதியான காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரு வாக்காளர் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது எவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விளக்கியுள்ளார்.
தேசிய அடையாள அட்டை
அதன்படி, “அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுடன் அடையாள அட்டையையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
மக்கள் பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் ஆகியவற்றை நீங்கள் எடுத்துச் செல்லலாம். கிராம அதிகாரி மூலம் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையும் வாக்களிக்க செல்லுபடியாகும்.”என கூறியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.