வெளிநாட்டு கடவுச்சீட்டு கொள்வனவு செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஏழரை இலட்சம் சாதாரண வெளிநாட்டு கடவுச் சீட்டுகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்வதனை தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த இடைக்கால தடை உத்தரவை இன்று (01.10.2024) நீதிமன்றம் நீக்கியது.
மனுதாரர்களுடனான இணைக்கப்பாட்டின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இந்த இடைக்கால தடை உத்தரவினால் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை வழங்குவதில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமை காரணமாக குறித்த தீர்மானத்தை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையாகி இருந்த மேலதிக சொலிசுட்டர் சுமத்தி தர்மவர்த்தன இது தொடர்பில் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இந்த கோரிக்கைக்கு அமைய மனுதாரர்கள் தனியார் நிறுவனம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள், பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்தில் கொண்டு இந்த இடைக்கால தடை உத்தரவை மாற்றிக் கொள்வதற்கு இணங்குவதாக தெரிவித்துள்ளனர்.
வழக்கு விசாரணை
இதன் அடிப்படையில், குறித்த இடைக்கால தடை உத்தரவினை நீக்கிக் கொள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எவ்வாறெனினும், வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் கொள்வனவு செய்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இடைநிறுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் அடுத்த வழக்கு விசாரணை வரையில் இந்த இடைக்கால தடை நீடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி மீள எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.