விபத்தில் உயிரிழந்த தனது மகனின் சிறந்த சாதாரண தரப் பெறுபேற்றைப் பார்த்து வேதனையடைந்த தந்தை ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த குறித்த மாணவன் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், பரீட்சைகள் முடிவடைந்து இரு நாட்களின் பின்னர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த 28ஆம் திகதி வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை பெறுபேறுகளின் படி குறித்த மாணவன் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
இதனை அடுத்து மகனின் பெறுபேறுகளை அறிந்து வேதனையடைந்த தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தந்தை 53 வயதுடையவர் எனவும், மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்த தந்தையின் மகன் மே மாதம் இரவு, கட்டான, இட்டகொடெல்ல வீதியில், உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், கார் ஒன்றில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர் மகனுக்கு அதிசிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளதை அறிந்த தந்தை தனது மகன் உயிருடன் இல்லை என்பதை நினைத்து மிகுந்த மன வேதனையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.