இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு, தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளாதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
11 பேர் அடங்கிய கட்சியின் தேர்தல் நியமனக்குழு இன்று வவுனியாவில் கூடி ஆராய்ந்திருந்தது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த எம்.ஏ சுமந்திரன், இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டிருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தாமாகவே எதிர்வரும் பொதுத் தேர்தலிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருந்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.