நாடாளுமன்றத் தேர்தலுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் , தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் அல்லது மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்குகளுக்கு விண்ணப்பிக்காமை மற்றும் குறைபாடுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை என்பன தேர்தல் கடமைகளில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஒரு காரணமல்ல என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் கூறுகிறார்.
அதேவேளை தேர்தல் பணிக்கு வருவதற்கான நியமனக் கடிதம் பெறும் அனைத்து அலுவலர்களும் உரிய தேர்தல் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும், தங்களது வழக்கமான பணியிடத்திற்குச் சென்று வருகைப் பதிவு சான்றிதழை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காத உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைக்க மறுப்பவர்கள் அல்லது தவறியவர்கள் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.