மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்து பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காசாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் வலுப்பெற்றுள்ள நிலையில்,மூன்று மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனும் அச்சத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற டெய்ர் அல்-பலா நகரிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த போரில் இருந்து, தம்மை பாதுகாத்துக்கொள்ள மில்லியன் கணக்காக மக்கள் டெய்ர் அல்-பலா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எனினும், இன்று தமது படையினர் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டத்தை மீறி, சிவிலியன் உள்கட்டமைப்பை ஹமாஸ் அமைப்பு திட்டமிட்டு துஸ்பிரயோகம் செய்ததற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.