கந்தானை வடக்கு படகம பிரதேசத்தில் கணவனின் உறவினரால் தாக்கப்பட்டுக் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ஜா – எல படகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் கடந்த 9 ஆம் திகதி அன்று தனது கணவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கணவனின் உறவினர் ஒருவர் உயிரிழந்த பெண்ணை சமரசம் செய்ய முயன்ற போது உயிரிழந்த பெண்ணுக்கும் கணவனின் உறவினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, கணவனின் உறவினர் பெண்ணை பலமாகத் தாக்கியதில் காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று (10) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கணவனின் உறவினரான படகம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.