எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பம் மிக நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட குடும்பம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச ஆகியோர் இம்முறை பொது தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட புதல்வரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்சவும் இம்முறை பொது தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை எனவும் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசியல் களத்தில் கடந்த சில தசாப்தங்களாக பெரும் செல்வாக்கு செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பம் இம்முறை தேர்தலில் பின்வாங்க நேரிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார் எனினும் ஐந்து வீத வாக்குகளையேனும் அவரால் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.