முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பொலிஸார் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன் பிரகாரம் கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து, சிபாரிசு பெற்றுக் கொள்கின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான இலக்கமொன்று வழங்கப்படுகின்றது.
எனினும் குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பதவி இலச்சினையை போலியாகத் தயாரித்து கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கு முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்போதைக்கு புகைப்பட ஸ்டூடியோ உரிமையாளர் ஒருவரும் அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடவுச்சீட்டு விவகாரத்தில் பொலிசாரின் தலையீடு அநாவசியமானது என்றும் விண்ணப்பதாரிகள் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில் புதிய நடைமுறையின் பிரகாரம் கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திலும் இரண்டு இடங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.