அம்பாறையில் நேற்று (13) முதல் இன்று (14) திடீரென ஏற்பட்ட அடைமழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை பிரதேச பிரதான வீதிகளில் நீர் நிரம்பி ஓடுவதுடன் வாகன சாரதிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்து பாதைகள் சில வெள்ளக்காடாக உள்ளது.
இதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது.
மழையினால் வீடுகள், வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் அவற்றை வெளியேற்றும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் திடீரென மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
சில வீதிகளில் வடிகான்களுக்கு மேலாக மழை நீர் பரவுவதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .