இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை பெண்கள் வலைப்பந்து தேசிய அணியினர், நேற்று (14) விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய அணியினருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இம்முறை ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக 14 ஆசிய நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்புச் சாம்பியன்
இந்த ஆண்டுக்கான போட்டியின் தொடக்க விழா அக்டோபர் 17ஆம் திகதி மாலை 03 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் அக்டோபர் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ளது.
நடப்புச் சாம்பியனான இலங்கை 2018 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் வெற்றி பெற்று, இம்முறை மூன்றாவது முறையாகவும் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
குறித்த அணியில் துலங்கி வன்னிதிலகே (கேப்டன்), ஹசித மெண்டிஸ், ரஷ்மி திவ்யாஞ்சலி, கயங்கலி அமரவன்ஷா, திஷாலா அல்கம, ஷனிகா பெரேரா, கயானி திசாநாயக்க, காயத்திரி கௌசல்யா, சுசீமா பண்டார, சச்சினி ரொட்ரிகோ, மல்மி ஹெட்டியாராச்சி, க்ளினி நிஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.