புத்தளம் (Puttalam) தேத்தாப்பலைப் பகுதியில் 49 வயதுடைய பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறுதலாக வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
தேத்தாப்பலைப் பகுதியிலிருந்து கரம்பை விகாரைக்கு நேற்று (26) இரவு மோட்டார் சைக்கிளில் தாயும் மகனும் சென்று பூஜையை முடித்து விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபொழுது பின்னால் இருந்த தாய் தவறுதலாக வீழ்ந்துள்ளார்.
எனினும், அவரது தாய் வீழ்ந்த இடத்திலிருந்து சுமார் 70 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னரே தாய் இல்லை என்பதை உணர்ந்து மோட்டார் சைக்கிளைத் திருப்பி, தாயைத் தேடிச் சென்றுள்ளார்.
தாய் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரினால் கைது
புத்தளம் தேத்தாப்பலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்கதுடன் உயிரிழந்தவரின் மகன் போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.