ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளி மீது, தமிழரசு கட்சி வேட்பாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் நேற்று (27) மாலை கிளிநொச்சி – ஸ்கந்தபுரம் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சமத்துவக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரான முன்னாள் போராளி மீது தமிழரசு கட்சியின் உள்ளுராட்சி மன்ற கிளிநொச்சி ஸ்கந்தபுரம் வட்டார வேட்பாளர் அகிலன் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மு.சந்திரகுமாருக்கு ஆதரவாக ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் பெண்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது குறித்த இடத்திற்கு மது போதையில் சென்ற அகிலன் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் மிகவும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது அவ்விடத்திற்கு சென்ற வேங்கை அவர்கள் பிரச்சார செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, பிரச்சாரம் என்பது ஐனநாயக செயற்பாடுகளில் ஒன்று எனவே எங்களுடைய கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் செயற்பாட்டிற்கு நீங்கள் இடையூறு செய்வது முறையல்ல என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக பெண்களிடம் அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி முரண்படுவது பண்பான செயற்பாடல்ல என தெரிவித்த போதே முன்னாள் போராளி மீது அகிலன் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அது குறித்த காணொளியும் சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில் தமிழரசு கட்சி வேட்பாளரின் செயலுக்கு பலரும் விசங்களை வெளியிட்டுள்ளனர்.