கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயமானது நேற்றையதினம் (07.11.2024) இடம்பெற்றுள்ளது.
துறைமுகத்தில் சுமார் 2 வருடங்களாக கொள்கலன் அனுமதியில் இழுபறி நிலவி வருவதால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக துறைமுகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மோசடி மற்றும் ஊழல்
சுமார் இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னர், துறைமுகத்தில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி ஒவ்வொரு நாளும் சுமார் 1,800 முதல் 2,000 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தற்போது துறைமுகத்தில் இருந்து கொள்கலன்கள் வெளியேறும் போது பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும், டோக்கன் எண் கொடுத்தாலும் அந்த வரிசையில் கொள்கலன்கள் துறைமுகத்தை விட்டு வெளியேறுவதில்லை எனவும் துறைமுக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சில சேவைப்பிரிவுகளில் உள்ளவர்கள் மது அருந்திக் கொண்டே கடமைகளைச் செய்வதாகவும், சிலர் தங்கள் கடமைகளைப் புறக்கணித்து வேறு வேளைகளுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, கொள்கலன் அகற்றும் செயற்பாடுகளை மோசடி மற்றும் ஊழல் இன்றி சுதந்திரமாக மேற்கொள்ள தமக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி தருமாறும் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.