பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 10வது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 160இற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுடன் புதிய நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தலைமையில் சபையின் முதல் நாள் பணிகள் ஆரம்பமாகும்.
செங்கோல் வைத்த பின்னர் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் திகதி மற்றும் நேரத்தை நிர்ணயம் செய்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல், அன்றைய தினம் முதல் பணியாக பொதுச் செயலாளரால் சபையில் சமர்ப்பிக்கப்படும்.
நாடாளுமன்ற கூட்டம்
பின்னர், அரசியலமைப்பின் உறுப்புரை 64 (1) மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 இன் விதிகளின்படி, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சபாநாயகர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர், உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம் செய்வார்கள் அதனை துணை சபாநாயகர் மற்றும் துணைக்குழு தலைவர் ஆகியோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறையாகும்.
தேர்தல் வாக்களிப்பு மூலம் 196 உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலம் 29 உறுப்பினர்களுமாக மொத்தம் 225 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.