வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் வடக்கு கிழக்கில் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கையில் தொடரும் பலத்த மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 59 ஆயிரத்து 629 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 75 ஆயிரத்து 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பெரிதும் பாதிப்பு
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி மற்றும் மாவடிப்பள்ளி வீதி நீரில் மூழ்கியதால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர்பாய ஆரம்பித்துள்ளது.
அத்டன் இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சம்மாந்துறை பிரதேச செயலகத்தையும் காரைதீவு பிரதேச செயலகத்தையும் இணைக்கின்ற மாவடிப்பள்ளி பாலமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதனூடாக போக்குவரத்து செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந்நிலையில் குறித்த பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள இலங்கை கடற்படை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
குறித்த வீதியால் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்களென ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் பயணித்து வருகின்றனர்.
அதோடு வயல் பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால் நெற் பயிர்கள் பாதிக்கும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.
கழிவு நிர் வாய்க்கால்கள் புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு எற்பட்டு வருவதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பல கிராமபட புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்ததால் பலர் வீடுகளைவிட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.