மன்னாரில் என்றும் இல்லாதவாறு இம்முறை மன்னார் மூன்றில் இரண்டு பங்கு நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தில் 19723 குடும்பங்களைச் சேர்ந்த 67928 பேர் இம்மழை காரணமாக பாதிப்படைந்துள்ளனர் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (28) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தில் கடந்த 23ந் திகதியிலிருந்து பெய்துவரும் மழையானது வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தைத் தொடர்ந்து பெரும் மழை வீழ்ச்சியைச் ஏற்படுத்தியுள்ளது.
மன்னாரில் என்றும் இல்லாதவாறு இம்முறை மன்னார் மூன்றில் இரண்டு பங்கு நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்தில் 19723 குடும்பங்களைச் சேர்ந்த 67928 பேர் இம்மழை காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.
இதனைவிட 3210 குடும்பங்களைச் சேர்ந்த 10263 பொது மக்கள் 69 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
சமைத்த உணவு லழங்குதல் நீரை வெளியேற்றுதல் போன்ற அவசர செலவுக்காக எமக்கு ஏழு மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைவாக நாங்கள் சமைத்த உணவுக்கான குறித்த தொகையை வழங்கி வரும் அதேவேளையில் மேலதிகமான நிதியையும் நாங்கள் கோரி இருக்கின்றோம்.
23ந் திகதி தொடக்கம் மழையின் காரணமாக இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு ஒரு வாரத்துக்கான உலர் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்படி நாங்கள் அரசை கேட்டுள்ளோம்.
இதைத் தொடர்ந்து 38 மில்லியன் ரூபாய் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் முக்கியமாக பயிர் செய்கையும் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்தமுறை மேற்கொள்ளப்பட்ட காலப்போக விவசாயத்தில் 7988 ஹெக்டர் நெற்செய்கை நீரினால் மூழ்கடிக்கப்பட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.
இதனை மதிப்பீடு செய்யும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான காப்புறுதி பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்பொழுது இங்கு நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலே பாதிப்படைந்த விவசாய ஹெக்டர்களுக்கு உரிய விதை நெல்லை இலவசமாக பெற்றுக் கொடுப்தற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையையும் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம்.
இத்துடன் மன்னார் மாவட்டத்திலுள்ள கால்நடைகள் பயிர் செய்யும் காலத்தில் பாலியாற்றுக்கு அருகாமையிலுள்ள தேத்தாவாடியில் விடுவது வழக்கம். அந்தவகையில் அங்கு விடப்பட்ட ஏழாயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் பெய்த கன மழை காரணமாக நீரினால் அடித்தச் செல்லப்பட்டுள்ளது.
இந்த கால்நடை தொடர்பான விபரங்களையும் மதிப்பீடு செய்வதில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு இலட்சத்து இருபதாயிரம் கால்நடைகளுக்கு பொறுத்தமான மேய்ச்சல் நிலம் இல்லாமை என்பது இங்குள்ள கால்நடை வளர்ப்போருக்கு ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. இதற்கும் நாம் ஒரு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
ஆகவேதான் இன்று (28) மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெள்ளம் இதனால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் போன்ற விபரங்களை ஆராய்ந்துள்ளோம்.
இந்த சேதங்கள் மதிப்பீடு செய்த பின்பு இதன் அறிக்கைகளை அனர்த்த முகாமைத்துவத்துக்கு அனுப்பி நஷ்டம் அடைந்தவர்களுக்கு நஷ்டஈட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் வெள்ளநிலை சீரடைந்து வருகின்றது. நேற்று (27) பிற்பகலில் இருந்து பெரும் மழை நிகழவில்லை. இருந்தும் மன்னார் மாவட்டத்தை யாழ் மாவட்டத்துடன் இணைக்கின்ற ஏ32 வீதி முல்லைத்தீவு , வவுனியா குளங்களில் பெருக்கெடுத்து வரும் நீரினால் இந்த வீதியை குறுக்கெடுத்து பாய்வதனால் இன்று (28) காலையிலிருந்து போக்குவரத்தும் தடைபட்டு வருகின்றது.
ஆகவே இந்த பாதையால் பிரயாணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு நாங்கள் மக்களை கேட்டுக் கொள்ளுகின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளையும் மன்னார் மாவட்ட அரச திணைக்கள ஒத்துழைப்புடன் பிரதேச செயலாளர்கள் அனர்த்த செயற்பாடுகளை மிக திறமையான முறையில் செயற்பட்டு வருவதையும் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்றி தெரிவிக்க்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.