ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் (Galle Marvels) அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை பிரேம் தக்கரை (Prem Thakur) எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டி, பல்லேகலயில் நடைபெற்று வரும் லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டியில் தனது அணியின் வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணய ஆலோசனை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த குற்றம் தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127வது பிரிவின் கீழ் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி உரிய இரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.