பொதுவாக எல்லா ஆலங்களிலும் உண்டியல் உள்ளது. ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் தமது காணிக்கைகளை உண்டியலில் போடுவது வழக்கம். சென்னை- திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ள சம்பவம் ஒன்று சென்னையில் அமைந்துள்ள பிரபல முருகன் கோவில் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை பக்தர் ஒருவர் அந்த முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆலயத்தில் அவர் உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது தவறுதலாக தனது ஐபோனையும் போட்டுவிட்டார்.
உடனே, அவர் தனது செல்போனை எடுத்துக்கொடுக்குமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர், சென்னை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதற்கு, கோயில் உண்டியல் திறக்கப்படும் போது தகவல் தெரிவிக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்தவாரம் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதனால், செல்போனை பெற அந்த பக்தர் வந்துள்ளார்.
ஆனால் அவர்கள், கோயில் உண்டியலில் போட்டது முருகனுக்கே சொந்தம் என்று கூறி ஐபோனை தர ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.
அதோடு செல்போனில் முக்கியமான தரவுகள் ஏதும் இருந்தால் அதனை மட்டும் வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
பின்னர், ஏழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து விட்டு செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு கவலையுடன் பக்தர் வீடு சென்றதாக கூறப்படுகின்றது.
உண்டியலில் இருந்த ஐபோன் கோயிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.