முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த தைப்பூச தினத்தின் போது இந்த 48 நாள் விரதம் இருப்பது வழக்கம். முருகனின் அருளை பெற வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தை இருக்கலாம்.
2025ம் ஆண்டில் பிப்ரவரி 11ம் திகதி தைப்பூசம் வருகிறது. அதனால் முருகனுக்கு 48 நாள் தைப்பூச விரதம் இருக்க விரும்புபவர்கள் 2024ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி துவங்கி, தைப்பூச தினமான பிப்ரவரி 11 ம் திகதி வரை மொத்தம் 48 நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
விரதம் துவங்கும் முறை
டிசம்பர் 25ம் திகதியன்று காலையில் எழுந்து அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று, எந்த கோரிக்கை நிறைவேறுவதற்காக விரதம் இருக்கிறீர்களோ அந்த கோரிக்கையை சொல்லி மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து, முருகனுக்கு ஏதாவது இனிப்பு நைவேத்தியம் செய்து வைத்து விரதத்தை துவங்குங்கள். நைவேத்தியம் ஏதும் செய்ய முடியாதவர்கள் எளிமையாக வெற்றிலை பாக்கு, ஒரு வாழைப்பழம் வைத்து அல்லது சிறிது கற்கண்டு வைத்து விரதத்தை துவங்கலாம்.
48 நாள் விரதம் இருக்க முடியாதவர்கள் செய்ய வேண்டியவை
48 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க முடியாதவர்கள் 21 நாட்கள் தைப்பூச விரதம் இருக்கலாம். இவர்கள் ஜனவரி 22ம் தேதி விரதத்தை துவக்கி, பிப்ரவரி 11ம் தேதி வரை விரதத்தை தொடரலாம். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்தால் போதும்.
தைப்பூசம் அன்று வீட்டில் விளக்கேற்றி வைத்து, முருகப் பெருமானுக்கு ஏதாவது நைவேத்தியம் படைத்து வழிபட்டு, அன்று மாலை விளக்கேற்றி வைத்து வழிபட்டு, முருகனுக்கு நன்றி தெரிவித்து விரதத்தை நிறைவு செய்யலாம். முடிந்தவர்கள் முருகன் கோவிலுக்கு சென்று தரிசித்தும் அல்லது பால் வாங்கி அபிஷேகம் செய்து விட்டும் வரலாம்.
48 நாட்கள் விரதத்தின் பலன்
முருகப் பெருமானுக்கு 48 நாட்கள் விரதம் இருந்தால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடையும். வாழ்க்கையில் இந்த 48 நாட்கள் முருகப் பெருமானுக்காக ஒதுக்கி மனதார வேண்டி விரதம் இருந்தால், வாழ்க்கையில் இனி மீதி இருக்கும் காலம் முழுவதும் முருகன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.
உங்கள் வாழ்க்கையை அவர் பார்த்துக் கொள்வார். குருவாக இருந்து உங்களை வழிநடத்திச் சென்று, உங்கள் வாழ்க்கையை படிப்படியாக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார். இந்த விரதத்தை ஒவ்வொரு வருடம் இருப்பது மிக மிக சிறப்பு. அப்படி முடியாதவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது இருப்பது நல்ல பலனை தரும்.