2025ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு விவாதம்
ஜனவரி 7ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பின்னர் காலை 10.30 முதல் மாலை 5.30 வரை, அரசு தரப்பில் ‘2024ம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கை’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஜனவரி 8ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 – 10.00 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கான நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் 10.00 காலை 10.30 நேரம் வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, காலை 10.30 முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிமுறைகள், அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ஆணை, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறை சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகள், கேசினோ வணிக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் விதிமுறைகள், துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி சட்டத்தின் கீழ் ஆணை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் குறித்து விவாதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.00 மணி முதல் 5.30 வரை சபை ஒத்திவைப்பின் போது கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ஆம் திகதி வியாழன் காலை 9.30 – 10.30 வரை வாய்மொழி பதிலுக்கான கேள்வி நேரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் காலை 10.30 முதல் 11.30 வரை இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சட்டத்தின் கீழ் ஆணை சிறப்பு சரக்கு வரி சட்டத்தின் கீழ் உத்தரவு மற்றும் நலன்புரி சலுகைகள் சட்டத்தின் கீழ் அறிவிப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.
எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதத்தை மாலை 5.30 வரை நடத்துவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஜனவரி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை முழு நாளும், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அன்றைய தினம் காலை 9.30 முதல் மாலை 5.30 வரையில் உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச்.நந்தசேன மற்றும் டியூடர் குணசேகர ஆகியோருக்கு அனுதாபப் பிரேரணைகளுக்கு நேரம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.