குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 97 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுத்திவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ர்னாநாயக்காவின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி குற்றத்தடுப்பு பொலிசார் மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர் குறித்த தேடுதல் நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் மேற்கொண்டிருந்தனர்.
காத்தான்குடி , புதிய காத்தான்குடி, நாவற்குடா, கல்லடி, புதுக்குடியிருப்பு, தாளங்குடா, ஆரையம்பதி உட்பட பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 10 நபர்களும், கசிப்பு போதைப்பொருள் விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட 60 நபர்களும், வேகமாக வாகனம் ஓட்டியமை உட்பட வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 27 பேருமாக 97 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கேரள கஞ்சா, கசிப்பு போதைப்பொருள் போன்றன மீட்கப்பட்டுள்ளன.
கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (08) முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.