இலங்கைக்கு மூன்றாம் தவணைக் கடனை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.
பெப்ரவரியில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் சபைக் கூட்டத்திற்கு முன்னர் அனைத்து முன் ஆயத்த நடவடிக்கைகளையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் சபைக்கூட்டத்திற்கு முன்னதாக இரண்டு சட்ட மசோதாக்கள் மற்றும் 2025 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2024இல் மூன்றாவது மதிப்பாய்வில் அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இலங்கைக்கு 333 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறக்கூடிய இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் மறுஆய்வின் இறுதி ஒப்புதலுக்காக IMF பணிப்பாளர் குழு அடுத்த மாதம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட பணிக்குழாம் தலைவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான குழு, விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை நடத்துவதற்காக நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.