சீமானுக்கு பதில் அளித்துள்ள தவெக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் சம்பத் குமார், “ஊடகவியலாளர்கள் மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவதையே சீமான் வழக்கமாகக் கொண்டிருப்பதாக” கடுமையாக சாடியுள்ளார்.
மாநாடு நடத்தியது முதல் விஜயை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், “பணக்கொழுப்பு” என சாடியதால், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் இருந்து முதல்முறையாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளின் வார்த்தை மோதல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்….
தவெக மாநாட்டிற்கு முன்பு விஜயின் சிறுசிறு கட்சி நடவடிக்கைகளுக்கும் வாழ்த்தும், வரவேற்பும் தெரிவித்து வந்த சீமானின் நடவடிக்கை, மாநாட்டிற்குப் பிறகு தலைகீழாக மாறியது. தொடர்ந்து, விஜயை தாறுமாறாக சீமான் விமர்சித்து வரும் நிலையில், பிரசாந்த் கிஷோருடன் விஜய் ஆலோசனை நடத்தியது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, “பணக்கொழுப்பால்” தேர்தல் வியூக வகுப்பாளரை நாடியிருப்பதாக விமர்சித்தார். மாநாட்டிற்குப் பிறகு கடந்த மூன்றரை மாதங்களாக சீமானின் விமர்சனங்களுக்கு தவெக தரப்பில் மயான அமைதியே பதிலாக இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.