இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்னர் பிரபல மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டைக் கொள்ளையடித்து 2.5 மில்லியன் ரூபாயுடன் தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களை குருவிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி அதிகாலையில், மாணிக்கக்கல்லை விற்பனை செய்வதாகக் கூறி, வேனில் வந்த சந்தேகநபர்கள், வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் குடியிருப்பாளர்களைத் தாக்கி கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
விளக்கமறியல் உத்தரவு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், எஹெலியகொடை, குருவிட்ட மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளைச் சேர்ந்த மூவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (15) இரத்தினபுரி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் இருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்றைய சந்தேகநபர், கொலைகளில் தொடர்புடையவர் என்பதால், நாளை (17) வரை தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலும் விசாரிக்க நீதவான் அனுமதி அளித்துள்ளார்.
குருவிட்ட பொலிஸின் குற்றத் தடுப்பு பிரிவு, அதே பகுதிகளில் வைத்து குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.