முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்கும் மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில் உறுப்பினராக உள்ள நீதியரசர் மேனகா விஜேசுந்தர, இன்று (10) வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகள் வெற்றிடங்கள் காணப்பட்ட போது அதற்காக நீதிபதிகள் நியமிக்கப்படாததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்காக ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது நீதியரசரான மேனகா விஜேசுந்தர வழக்கில் இருந்து விலகுவதால், இந்த மனுவை மே 9 ஆம் திகதி அவர் இன்றிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலிப்பதற்காக அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த மனுவை ஜனாதிபதி சட்டத்தரணி சேனக வல்கம்பாய சமர்ப்பித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இதில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் வெற்றிடமாக இருந்ததாக மனுதாரரான ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அப்போதைய ஜனாதிபதி இந்த வெற்றிடங்களை நிரப்பத் தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.



















