நாட்டில் சிறுநீரக நோய் காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்திரம் 1626 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் நாளாந்தம் சுமார் 5 பேர் சிறுநீரக நோயால் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
சர்வதேச சிறுநீரக தினத்தை முன்னிட்டு அண்மையில் சுகாதார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டில் சிறுநீரக நோயைக் குறைப்பதுடன், தொற்றா நோய்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவதே எமது முதன்மையான குறிக்கோளாகும்.
அதற்கு முதலில் நோயைக் கண்டறிவதுடன் நோய் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் அதனைக் கட்டுப்படுத்துவதும் அவசியமானதாகும்.
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெரும் தொகையான பணத்தை செலவிடுகிறது. இந்த நாட்டில் 30 தொடக்கம் 70 வயதுக்கு உட்பட்டவர்களே அதிக அளவில் சிறுநீரக நோய்களுக்கு ஆளாவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
உழைக்கும் வயதினர் இவ்வாறு நோய்களுக்கு ஆளாகுவது இந்நாட்டின் முன்னேற்றத்தில் ஏற்படும் பாரிய இழப்பாக உள்ளது. சர்வதேச சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் மார்ச் 13 ஆம் திகதி உலக சிறுநீரக தினமாகும். இந்த ஆண்டு உலக சிறுநீரக தினம் “விழிப்புடன் இருங்கள், ஆரம்பத்திலேயே கண்டறியுங்கள், சிறுநீரகங்களை காப்பாற்றுங்கள்” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் சுகாதாரத் தரவுகளின்படி, உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் சுமார் 10 சதவீதம் பேர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், 2023 ஆம் ஆண்டிற்கான தரவுகளுக்கமைய நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிப்புக்குள்ளாகிய 2 இலட்சத்து 13 ஆயிரத்து 448 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்பட்ட சிறுநீரக நோய் காரணமாக 1626 உயிரிழப்புகளும் அவ்வாண்டு பதிவாகியுள்ளதுடன் நாளாந்தம் சுமார் 5 இவ்வாறு உயிரிழப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சையினைப் பெற்றுக் கொள்கின்றனர். அத்தோடு சுமார் 300 பேருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
வடமத்திய மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ளனர், நோயாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பொலன்னறுவை மற்றும் கொழும்பு, மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் இரு சிறப்பு சிறுநீரக மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள 81 அரசு மருத்துவமனைகளிலும் சிறுநீரக நோய்க்கான சிறப்பு பிரிவுகள் உள்ளன.
சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழந்தால் இரத்தச்சுத்திகரிப்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு கூறுகிறது என்றார்.



















