கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் கீழ் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் நாட்டின் அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தினார்கள். அதுமட்டுமன்றி அவற்றை தமது சொந்தச் சொத்துக்களாகவும் கையகப்படுத்தியுள்ளனர்.
அவ்வாறான நிலையில், நாங்கள் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக அவற்றை மீளப்பெற்று அரச வளங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளோம்.
அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிதிகளை சட்டப்பூர்வமாக பறிமுதல் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள சட்டமூலமான எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஆட்சியாளர்களும் அவர்களது சகபாடிகளும் பொது சொத்துக்களை தனிப்பட்ட சொத்துக்களாக்கியுள்ளனர். இதற்கு பல்வேறு சான்றுகள் எம்மிடத்தில் உள்ளன. அவ்விதமான நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுகின்ற போது அது பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு வழி சமைக்கும்.
பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஊழலை எதிர்த்துப் திறம்பட போராடுவதற்கும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை உறுதியாகக் கொண்டுள்ளது. ஆகவே அந்த விடயத்தில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை என்றார்.