கொழும்பு வெல்லம்பிட்டி மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் முச்சக்கரவண்டிகளை திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் வெல்லம்பிட்டி பொலிஸாரால் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் மீதொட்டமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீதொட்டமுல்ல பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 13 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சந்தேக நபர் திருடிய முச்சக்கரவண்டிகளுக்கு போலி இலக்கத் தகடுகளை பொருத்தி அதனை ஹோமாகம மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களில் உள்ள இரு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை (24) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



















