பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும். இது ஆடை தொழிற்துறையை பெரிதும் பாதிக்கும் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் செயலாளர் யொஹான் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 2ஆம் திகதி அறிவித்த 10 வீத அடிப்படை வரியை இன்று முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதன் கீழ், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத வித்தியாசமான விகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இது 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
எமது பிராந்தியத்தின் போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க வரி வீதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, இலங்கையை விட குறைந்த சுங்க வரி விதிக்கப்படும் நாடுகள் விரைவில் அமெரிக்க சந்தையில் நுழையும் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படும்.
இலங்கையின் ஆடை ஏற்றுமதிகளில் மிகப்பெரிய ஒற்றை சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. இது மொத்த ஏற்றுமதிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டு மாத்திரம் ஆடை ஏற்றுமதி 5.5 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.
இந்த வரி மாற்றம் காரணமாக இலங்கை ஏற்றுமதிகளுக்கு உடனடியாகவும் கடுமையாகவும் பாதிப்பு ஏற்படலாம். இதன் விளைவாக, அமெரிக்க சந்தைக்கான நமது ஏற்றுமதிகளில் கணிசமான பங்கு போட்டிச் சந்தைகளுக்கு மாற்றப்படுவதை நாம் காணலாம். எனினும், அமெரிக்காவில் நாம் ஈட்டியிருந்த சந்தைப் பங்கை மற்ற சந்தைகளில் ஈடுசெய்ய முடியாது.
இந்த நிலைமைக்கான பொருத்தமான நடவடிக்கைகளை தீர்மானிக்க, இலங்கை அரசு ஏற்கனவே தொழில்துறைப் பிரதிநிதிகள் மற்றும் பிற தரப்பினருடன் கலந்தாலோசனைகளைத் தொடங்கியுள்ளது. இந்த நெருக்கடியைக் தவிர்க்க அரசு மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள நாணய திட்டத்தின் வரம்புகளுக்குள் இருக்கும்போது, அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்ட இந்த சிக்கலுக்கு மிகவும் பொருத்தமான தீர்வுகளை எவ்வாறு வழங்குவது என்பதைக் கண்டறிய தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம்.
இந்த சவால்கள் இடையேயும், இலங்கையின் ஆடைத்துறை வெளிப்படைத்தன்மை, நெறிமுறைபூர்வமான உற்பத்தி மற்றும் நிலைத்தன்மைக்கான மதிப்புகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
தற்போது நாங்கள் தொழில்துறையின் உற்பத்தித் திறன், செயல்திறன் மற்றும் நம்பகமான மூலப்பொருட்களின் பயன்பாட்டை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளோம். ஆனால் இது ஒரு மிகவும் கடுமையான நெருக்கடியாகும், இதை ஒரு அவசர தேசியப் பிரச்சினையாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.