16 வயதுக்கு உட்பட்ட சிறார் நேரலை செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்துவதாக அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகளை தேவையில்லாத பதிவுகளில் இருந்து தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் புதிய அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சத்தின்படி, 16 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் இன்ஸ்டாகிராமில் வீடியோவை நேரலை செய்ய பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகளிலும் இந்த அம்சம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
முதல் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடாவில் இந்த அம்சம் அறிமுகமாக இருக்கிறது. உலகிலேயே முதல் நாடாக அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் அறிவித்துள்ள புதிய அப்டேட்டின்படி, இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை பதின்பருவத்தினரின் கணக்குகள் ஸ்லீப் மோடுக்கு சென்றுவிடும்.
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த அம்சங்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் அமுலாக இருக்கிறது.