சென்னையில், தொண்டைக்குள் திடீரென்று பாய்ந்து சிக்கிய மீனால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை மதுராந்தகம் அருகே கிழவளவு ஏரியில், மணிகண்டன் (வயது 29) என்பவர் தூண்டில் உள்பட எந்த மீன்பிடி உபகரணங்களும் இன்றி மீன்பிடிக்க சென்றுள்ளார். இதனால் தண்ணீருக்குள் குதித்து கைகளால் மீனை பிடிக்க அவர் முடிவு செய்துள்ளார்.
ஒரே நேரத்தில் 2 மீன்களை அவர் தனது கையில் பிடித்துள்ளார். மீன்கள் உயிரோடு இருந்ததால் அவரது கையில் இருந்து தப்பிக்க முயன்றது. இதனால் மணிகண்டன் ஒரு மீனை தனது ஒரு கையிலும், இன்னொரு மீனை தனது வாயில் வைத்து கடித்து கொண்டு தண்ணீரில் இருந்து வெளியே வர முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது வாயில் உயிருடன் இருந்த மீன் அவரது வாய்க்குள் நுழைந்து தொண்டைக்குள் அடைப்பட்டது. தொண்டையில் சிக்கிய மீனால் அவரால் மூச்சுவிட முடியவில்லை.
இதனால் பயந்துபோன மணிகண்டன் ஏரியில் இருந்து வேகமாக வெளியேறி அரையப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு குடும்பத்தினர், பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரது தொண்டையில் சிக்கிய மீனை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களால் மீனை எடுக்க முடியவில்லை.
இதற்கிடையே மூச்சுவிட முடியாமல் மணிகண்டன் துடிதுடித்து மயங்கியதுடன், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.