அரச சேவையில் உள்ள நான்கு தரங்களைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் வகையில் முந்தைய அரசாங்கத்தின் போது அமைச்சரவை எடுத்த முடிவை செயற்படுத்துவதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை செல்லுபடியற்றதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மறுபரிசீலனை செய்யவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் மற்றொரு உத்தரவைப் பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு சட்டத்துக்கு முரணா னது என்று அதனை இரத்துச் செய்யக்கோரி சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த பின்னர், நீதியரசர்கள் யசந்த கோதா கொட, ஜனக் டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
அரச ஊழியர்கள் 60 வயதில் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்று முந்தைய அரசாங்கத்தின்போது அமைச்சரவை முடிவு எடுத்திருந்தது.
அந்த முடிவுக்கு எதிராக பொதுச் சேவை ஐக்கிய செவிலியர் சங்கமும் அதன் தலைவருமான வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அது தொடர்புடைய தீர்ப்பை செயல்படுத்துவதைத் தடுத்து இந்த இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்ட விதம் சட்டத்துக்கு முரணானது என்றும் அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி, சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வே இந்த உத்தரவை பிறப்பித்தது.
மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ருவந்த குரே ஆஜரானார். அதே நேரத்தில் சட்ட மா அதிபர் சார்பாக அரச வழக்கறிஞர் நயனதரா பாலபட்டபெந்தி மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி அப்ரு ஆகியோர் ஆஜரானார்கள்.



















