மொனராகலை மாவட்டத்தின் பிபிலை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே சனிக்கிழமை மாலை வெட்டிப் படுகொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கூலி வேலைக்குச் சென்ற மேற்படி பெண்ணின் கணவன், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு மது போதையில் வந்தார்.
இதன்போது அவருக்கும் மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் போதையில் இருந்த கணவன், வீட்டில் வைத்திருந்த வாளால் மனைவியை வெட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தார்.
அவரின் 5, 7 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் கதறல் சத்தத்தால் வீட்டுக்கு வந்த அயலவர்கள், படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், பிள்ளைகள் இருவரையும் பொறுப்பேற்றதுடன் தாயைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவான தந்தையைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.



















