நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில், தடையினையும் மீறி கனரக வாகனங்கள் பயணிப்பதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அதற்கான அறிவிப்பு பலகைகள் நகரின் எல்லை நுழைவு பகுதியின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த எச்சரிக்கையினையும் மீறி, தொடர்ந்தும் கனரக வாகனங்கள் அத்துமீறி செல்வதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
3.2 கிலோமீட்டர் தூரம் கொண்ட, இந்த வீதியானது பாரிய வளைவுகளையும், பள்ளத்தையும் கொண்டதாகும்.
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில்,கடந்த வருடம் பேருந்து ஒன்று வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.
இதனையடுத்து அந்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், தடைகளையும் மீறி பயணிக்கும் கனரக வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.



















