கம்பளை – வெலம்பொடை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ. 22 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று பிரதிவாதியுடன் திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கம்பளை காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்ததன் பின்னர், பிரதிவாதியுடன் பேருந்து தரிப்பிடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போதே அவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் 48 வயதுடைய நபரே கடத்தப்பட்டுள்ளார்.
கம்பளை நகரத்தில் உள்ள பாலத்திற்கு அருகில் சிற்றூர்ந்தில் வந்த ஒரு குழுவினரால் இந்த கடத்தல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அவருடன் இருந்த நபர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் என்ற சந்தேகத்தின் பேரில் கடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய கடத்தல்காரர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் , பாதுகாப்பு கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த மே மாதம் 8 ஆம் திகதி இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கம்பளை பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவரிடம், தங்களிடம் 15 தங்க பிஸ்கட்டுகள் இருப்பதாகவும், அந்த தங்க பிஸ்கட்டுகளை வியாபாரம் செய்யவுள்ளதாகவும் கூறி தொழிலதிபரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் இதுவரை பல சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும், இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



















