நாட்டில் திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளத்திற்கான தட்டுப்பாடே இதற்கான காரணம் என இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரிபோஷா உற்பத்திக்காக 18 ஆயிரம் மெற்றிக் டன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதிக்காக, கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த திருத்தங்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை பத்திரம், எதிர்வரும் 7 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் வரை சோள இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கடந்த 21 ஆம் திகதி முதல் திரிபோஷா உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் சோள இறக்குமதியை மேற்கொண்ட பின்னர், திரிபோஷா உற்பத்தியை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட திரிபோஷா, நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுவருவதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க மேலும் கூறியுள்ளார்.



















