அடுத்த வருடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வாழ்விடமொன்று இருப்பது அடிப்படை மனித உரிமையாகும். வீடொன்றிற்காக தமது வாழ்நாள் முழுதும் அளவிலா துயரம் அனுபவிக்கும், பெருமூச்சு விடும் மனிதர்கள் இந்நாட்டில் உள்ளனர். எமது நாட்டு மக்களின் வாழ்வுக்கு ஆறுதலைக் கொண்டுவரும் எனும் எதிர்பார்ப்புடன் நாம் வீடொன்றுக்கான கனவை நனவாக்கும் செயற்பாட்டினை ஆரம்பிக்கின்றோம்.
வீட்டுப் பிரச்சினை எழுவதற்கு பல காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றுள் வறுமை, போதிய வருமானமின்மை, காணிப் பற்றாக்குறை, கட்டுமானச் செலவினம் அதிகரித்தல், குடிபெயர்வு, முறையற்ற நகரமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் இயற்கை அனர்த்தம் முதலான பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இவ்வாறான வீட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சகல தரப்பினர்களையும் உள்ளடக்கியதாக புதிய அணுகுமுறைக்கு அமைய, வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றினை 2026 ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம். அவ்வேலைத் திட்டத்தின் கீழ், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.



















