இலங்கையில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த விடயம் நேற்று மாலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 214 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு
இதேவேளை, 4 ஆயிரத்து 164 வீடுகள் முழுமையாகவும் 67 ஆயிரத்து 505 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளது.
சீரற்ற காலநிலையால் 5 லட்சத்து 86 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த 20 லட்சத்து 82 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு, மருத்துவ உதவி மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்க அவசரகால மீட்புக் குழுக்கள் 24 மணி நேரமும் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குரிய கொடுப்பனவாக 2 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ரூ.25000 வரையிலும் இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ரூ.50,000 வரையிலும் 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















