நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாத்தளை மாவட்டத்தில் ஒரு பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், நுவரெலியா மாவட்டத்தின் தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
8,500 பாடசாலை மாணவர்கள் பாதிப்பு
மேலும் காணாமல் போன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கண்டி மாவட்டத்தில் 97,850 பாடசாலை மாணவர்கள் அனர்த்த நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் மாத்தளை மாவட்டத்தில் 8,500 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்போது, அவர்கள் அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



















