ஐக்கிய நாடுகள் சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிர்களுடன் இணைந்து, இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயன்று வருவதாக இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே தெரிவித்துள்ளார்.
இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
‘டித்வா’ புயலால் நாடு முழுவதும் பெரும் அழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐ.நா. பேரிடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஏழு துறைகளை உள்ளடக்கிய ஒரு முன்னுரிமைப் பட்டியலைத் தயாரித்துள்ளதாகக் கூறினார்.
அரசாங்கம் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு தலைமை தாங்குகின்றது என்றும், ஐ.நா. மற்றும் பிற உள்ளூர், சர்வதேச பங்காளிகள் பல துறைகளில் தமது ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சிக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவுடன் ஐ.நா. ஏற்கனவே 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது என்று இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே குறிப்பிட்டார்.
ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் வரும் மாதங்களில் மேலும் 26 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



















