புதிய சீர்திருத்தத்தின்படி, சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாகக் குறைக்கப்படவுள்ளதுடன் மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், தாய்மொழி, சமயம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய 5 முக்கிய பாடங்கள் படிக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ (Nalaka Kaluwewe) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொழில்நுட்பம், அழகியல், முகாமைத்துவம் மற்றும் தொழில்முனைவு, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல், மற்றும் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற பிரிவுகளிலிருந்து மேலும் 2 பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே நாலக களுவெவ இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுப் பாதிப்புகள் காரணமாக, 2026 ஜனவரியில் தொடங்கத் திட்டமிடப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் பாதிக்கப்படாது.
ஜனவரியில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது, முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து மாற்றங்களும் சம்பந்தப்பட்ட வகுப்புகளில் நடைமுறைக்கு வரும்.
மேலும் முழுமையான நடைமுறைப்படுத்தல் ஜனவரி 22ஆம் திகதிக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய கட்டமைப்புக்கு இணங்க செயற்படுமாறு சுற்றறிக்கைகள் மூலம் பாடசாலைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம்
பாடசாலை நேர அட்டவணை ஒரு நாளைக்கு 7 கற்பித்தல் காலங்களாக (Teaching periods) மாற்றப்படுவதுடன், ஒவ்வொரு பாடமும் 50 நிமிடங்கள் நீடிக்கும்.
எனினும் பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
சீர்திருத்தங்களை இறுதி செய்வதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுக்கு தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டது, ஆனால் சில பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபடவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.



















