பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கான புதிய வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரீன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைவு, அமைச்சரவை அல்லது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று திருத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
புதிய வரைவு
இந்த வரைவு தற்போது நீதி அமைச்சின் இணையதளத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் இது தொடர்பான தங்களது பரிந்துரைகளை 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிவரை சமர்ப்பிக்க முடியும் எனவும், பெறப்படும் கருத்துக்கள் ஆய்வுக்காக மீண்டும் அதே தயாரிப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் முறையான சட்டத்தை உருவாக்குவதற்கு தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் குழுக்களின் பங்களிப்பு அவசியம் என்பதால், அனைவரையும் தமது கருத்துக்களை வழங்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.




















