இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடுவதற்கான மருத்துவ குணங்கள் மாட்டு சிறுநீரில் இருப்பதாக நம்பப்படுவதால், நூற்றுக்கணக்கான மக்கள் மாட்டு சிறுநீர் குடிக்கும் விருந்தில் கலந்து கொண்டனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு நம்பிக்கையில் சில நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கடந்த சனிக்கிழமை அகில் பாரத் இந்து மகாசபா (அகில இந்திய இந்து யூனியன்) என்று அழைக்கப்படும் ஒரு குழு மாட்டு சிறுநீர் குடிக்கும் விருந்து ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதில் கொரோனாவுடன் போராடுவதற்கான மருத்துவ குணங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையில், இந்த விருந்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில் கலந்து கொண்ட ஓம் பிரகாஷ் என்பவர், நாங்கள் 21 ஆண்டுகளாக மாட்டு சிறுநீர் குடித்து வருகிறோம், மாட்டு சாணத்திலும் குளிக்கிறோம், ஆங்கில மருந்தை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை நாங்கள் ஒருபோதும் உணரவில்லை என்று கூறுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்து தேசியவாதக் கட்சியின் தலைவர்கள் இதற்கு முன்னர் பசு சிறுநீரை மருந்தாகவும், புற்றுநோயைக் குணப்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒரு சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, மாட்டு சிறுநீர் மற்றும் சாணத்தை கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.