சென்னையில், ஒரே வீட்டைக் காட்டி, பலரிடம் மோசடியில் ஈடுபட்டு, பல லட்சம் பணத்தை சுருட்டிய தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல்காதர். பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் இவர், அதே பகுதியில் குத்தகைக்கு வீடு தேடி வந்துள்ளார். அப்போது, இணையதளம் ஒன்றில், ரவி-அமுதா எனும் தம்பதி, தங்களது வீடு லீசுக்கு விடுவதாக விளம்பரம் செய்திருந்தனர். அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண் வாயிலாக, அவர்களை தொடர்பு கொண்டு நேரில் சந்திதுள்ளார் அப்துல்காதர்.
பின்னர், அவர்கள் போட்டோவுடன் விளம்பரப்படுத்தியிருந்த வீட்டை பார்த்ததும், அப்துல் காதருக்கு பிடித்திருந்துள்ளது. எனவே, 15 லட்சம் ரூபாய்க்கு குத்தகை பேசி முடித்து, ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி, முதல் தவணையாக 8 லட்சம் ரூபாயும், இரண்டாம் தவணையாக 7 லட்சம் ரூபாயையும் காசோலையாக ரவி-அமுதா தம்பதியிடம் வழங்கியுள்ளார் அப்துல் காதர். இது நடந்தது எல்லாம் கடந்த ஜனவரி மாதத்தில். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்டு, பல மாதங்களாகியும் ஒப்பந்தப்படி, வீட்டை அப்துல் காதரிடம் ஒப்படைக்காமல், சாக்குப்போக்கு சொல்லி வந்துள்ளனர் அந்த தம்பதி. பொறுமையிழந்த அப்துல் காதர், குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், சாக்குப் போக்குச் சொல்லி வீட்டை கொடுப்பதை தட்டிக் கழித்து வந்த அந்த தம்பதி, பணத்தை திருப்பிக் கேட்டதும், அப்துல் காதரை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.
வீட்டையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல் கடந்த 8 மாதங்களாக அலைக்கழிக்கப்பட்டு வந்த அப்துல்காதர், வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்துல் காதரிடம், ரவி – அமுதா தம்பதியிடம் மோசடி செய்தது உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, தியாகராயநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவி – அமுதா தம்பதியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோதுதான், அப்துல் காதரை மோசடி செய்ததை போல, ஒரே வீட்டைக் காட்டி பலரிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இணைய தளத்தில் பதிவிடப்பட்ட வீட்டு புகைப்படத்தை பார்த்து குத்தகைக்கு எடுக்க வருபவர்களிடம், 15 முதல் 20 லட்சம் வரை இந்த தம்பதி பணம் வசூலித்துள்ளனர். பின்னர், ஏதாவது சாக்கு சொல்லி வீட்டை கொடுப்பதை தாமதப்படுத்தி வந்துள்ளனர். மேலும், பணத்தை திரும்பிக் கேட்பவர்களை மிரட்டியும் வந்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இந்த தம்பதியால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.