மன்னாரில் மீள்குடியேற்ற பணிகளை முன்னெடுப்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கமே தனக்கு உதவியதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மரங்களை வெட்டுவது ஒரு பாவமான செயல் என இஸ்லாம் மார்க்கத்தில் போதிக்கப்பட்டுள்ளதாகவும் தாம் மரங்களை வெட்டி நாசம் செய்தவர்கள் அல்ல எனவும் அவர் அண்மையில் கொழும்பு மட்டக்குளியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டார்.
தாம் வில்பத்து வனப்பகுதியை வெட்டி நாசம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டபோதும் அவ்வாறு செய்திருந்தால் தமக்கு தண்டனையை வழங்குமாறு இதன்போது அவர் தெரிவித்தார்.
அதேவேளை தாம் அவ்வாறு செய்திருந்தால் அதிகபட்ச தண்டனை தமக்கு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
தாம் 15 – 16 வருடங்கள் அமைச்சராக கடமையாற்றியுள்ள நிலையில் நாட்டுக்காக செயற்பட்டதாக அவர் கூறினார்.
இந்த காலக்கட்டத்தில் எந்தவிதமான தப்பான காரியங்களில் தாம் ஈடுபடவில்லை என சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சிலர் தம்மை சிறையில் அடைக்க முயற்சி செய்வதாகவும் முடிந்தால் சிறையில் அடைத்து பார்க்குமாறும் அவர் இங்கு சவால் விடுத்துள்ளார்.