ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது தேர்தலை நடத்தும் அவசரம் ஏற்பட்டுள்ளதாகவும் சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான கதைகள் தேர்தலில் பேசப்படும் என்பதால், அதற்கு முன்னர் பொதுத் தேர்தலை பெற அந்தக் கட்சி முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,
அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தை மார்ச் மாதம் கலைத்தால் ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தலை நடத்த முடியும்.
ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் நடந்த தினம் வரும் என்பதால், மார்ச் மாதம் தேர்தலை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
நாடாளுமன்றத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் கலைக்க ஆதரவளிப்பது குறித்து தற்போது ஐக்கிய தேசியக் கட்சி அக்கறை காட்டி வருகிறது எனவும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் அந்த கட்சியினர் தப்பிக்க முடியாது எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.