நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும், காணாமல் போன உறவுகளின் சங்க இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வவுனியா காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராகவும் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப்படத்தில் “தமிழர்களின் விடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்த போர்குற்றவாளி தன் எழுச்சி மக்கள் போராட்டங்களையும் காட்டுக்கொடுக்க வந்துவிட்டான். ஐ.நாவே ஓநாயை உடனடியாக கைதுசெய் உண்மைகள் வெளிவரும்” என்ற வசனம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், அவரது உருவ படத்திற்கு சாணியினை கரைத்து ஊற்றி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இதன் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தல் அமைந்துள்ள பகுதிக்கு சென்று சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலிற்குள்ளானவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தேவானந்தாவிற்கு எதிராக அவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.